Popular Posts

Monday, July 25, 2011

நபிமொழி அறிவோம்!

நபிமொழி அறிவோம்!

"எந்த மனிதனும் தன்னுடைய கரங்களால் உழைத்து உண்ணும் உணவைவிட வேறு உயர்ந்த உணவை என்றுமே உண்டதில்லை. அல்லாஹ்வின் தூதர் தாவ+த் (அலை) அவர்கள் தம் கரங்களால் (உழைத்து) சம்பாதித்த உணவையே உண்பவர்களாக இருந்தார்கள்" - நபி(ஸல்) நூல்: புகாரி
"உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

"பதவிக்காக ஆசைப்படாதீர்கள். நீங்கள் அதைக் கேட்டு பெற்றால் அதனிடமே நீங்கள் ஒப்படைக்கப் படுவீர்கள். நீங்கள் கேட்காமலேயே அப்பதவி உங்களுக்கு கிடைத்தால் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற உங்களுக்கு உதவி கிடைக்கும்." - நபி(ஸல்) நூல்: புகாரி
"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும். - நபி (ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர், தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி

"கொடுமைக்குள்ளானவனின் முறையீட்டைக் குறித்து அஞ்சுங்கள். ஏனெனில், அவன் அல்லாஹ்விடம் தன் உரிமையையே கோருகின்றான். அல்லாஹ், உரிமையுடைய ஒருவனை உரிமை இழக்கச் செய்வதில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அலீ (ரலி)"தன் இறைவனை நினைவு கூர்பவனுக்கும், அவனை நினைவு கூறாதவனுக்கும் உதாரணம் : உயிருள்ளவன், மரணித்தவன் போலாகும்" நபி(ஸல்) - நூல்: புகாரி
"எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது" - நபி(ஸல்) நூற்கள்: புகாரி, முஸ்லிம்
ஜும்ஆ நாளில் ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உரையின் பொழுது பள்ளியினுள் நுழைந்த ஒருவர், உட்கார்ந்திருப்பவர்களைத் தாண்டிக் கொண்டு (முன்னேறி) வந்தார். அவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள், உட்காருங்கள், நீங்கள் மற்றவர்களுக்குத் தொந்தரவு தருகின்றீர்கள் என்று கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூது
மிகப்பெரும் பாவங்களில் ஒன்று பெற்றோரை ஏசுவது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் எவ்வாறு தனது பெற்றோரை ஏசுவார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒருவர், மற்றவரின் பெற்றோரை ஏசும்போது அவர், இவரது பெற்றோரை ஏசுவார். இதுதான் பெற்றோரை ஏசுவதாகும்" நூல்: புகாரி, முஸ்லிம்
"இறுதி மூச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவ மன்னிப்புக் கோரலை வல்ல அல்லாஹ் அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறான்" நபி(ஸல்) அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) நூல்: திர்மிதி

"இறந்தவர்களைத் திட்டாதீர்கள், ஏனெனில், அவர்கள் தம் செயல்களின் (விளைவுகளின்) பால் சென்றடைந்துவிட்டார்கள்" நபி (ஸல்) அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி) - நூல்: புகாரி

யார் (உறுதியான) நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகின்றன - நபி (ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள், அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப்பற்றுக்காக! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும், உமக்கு நலம் உண்டாகட்டும்!" - நபி(ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்"ஓர் இறைநம்பிக்கையுடைய கணவன் தன் இறைநம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு பழக்கம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு பழக்கங்கள் அவனுக்கு மனநிறைவு அளிக்கக்கூடும்" - நபி (ஸல்) அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம்
"அக்கிரமம் செய்யாதீர்கள்! எவருடைய செல்வமும் உங்களுக்கு ஆகுமானதன்று: செல்வத்தின் உரிமையாளர், அதனைத் தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுத்தாலே தவிர!" - நபி(ஸல்) நூல்: பைஹகீ

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்" - நபிகள் நாயகம் (ஸல்) - நூல்: புகாரி, முஸ்லிம்
உங்களில் ஒருவர் தன் இறைவனோடு மிகவும் நெருக்கமாக உள்ள நேரம் சுஜூது (சிரம் பணிந்து தொழச்) செய்யும் நேரம், ஆகவே அதில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள் - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்
தொழுகை ஒளியாகும். தர்மம் அத்தாட்சியாகும். பொறுமை வெளிச்சமாகும். திருக்குர்ஆன் உங்களுக்கு சாதகமான அல்லது எதிரான ஒரு நிரூபணமாகும்" - நபி(ஸல்) நூல்: முஸ்லிம்

''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழானாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி

"நிச்சயமாக அல்லாஹ் மக்களின் மீது ஸதகாவை (தானதர்மத்தை) கடமையாக்கியுள்ளான். அது மக்களில் பொருள் வசதி படைத்தவர்களிடம் வாங்கப்பட்டு, ஏழ்மையுள்ளவர்களிடம் திருப்பித் தரப்படும்" நபி(ஸல்) அறிவிப்பாளர் : அப்பாஸ் (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்
"எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க வேண்டுமென வேண்டினாரோ அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி

"இறந்தவரைப் பின்தொடர்பவை மூன்று. (அவற்றில்) அவரின் குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவரின் செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்" நபி(ஸல்) அறிவிப்பாளர்:அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி
"தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும்" நபி(ஸல்)அறிவிப்பாளர் : ஸயீதுப்னுல் ஆஸ் (ரலி
"எந்த மனிதர் பொறுமையாயிருக்க முயல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பொறுமையை அளிப்பான். பொறுமையைவிடச் சிறந்தது பல நன்மைகளைக் குவிக்கக் கூடியதுமான கொடை வேறெதுவுமில்லை" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஸயீத் அல் குத்ரி (ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்

"வழங்கும் (உயர்ந்த) கை, வாங்கும்(தாழ்ந்த) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!" - நபி(ஸல்) அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி) நூல்:புகாரி
நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள் - நபி (ஸல்) நூல்: புகாரி, முஸ்லிம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்

ஏகஇறைவனின் திருப்பெயரால்....
من صام رمضان اماناً و احتِساباً غُفِر له ما تقدًَم من ذنبه
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.
மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,
ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விட, தாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.
 
 
மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும், உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் ? என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். திருக்குர்ஆன் 2:30
 
 
நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.
 
 
அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
 
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33
 
நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையா? என்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு  கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34
 
 
எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது ?
 
என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்கு, நான் உயர்ந்தவனா ? அவர் உயர்ந்தவாரா ? என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே  விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !
''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை காண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.
 
 
''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.
 
 
''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்  வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75 லிருந்து 78 வரையிலான வசனங்கள்.
 
 
உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.  
இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்து, இன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன். திருக்குர்ஆன் 2:35 
 
 
தடையை மீறினார் வழி தவறினார்.
 
 
எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும், நிலையான வாழ்வும், இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
 
 
20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும், அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)
 
20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.
 
இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்
 
அன்று
 
அந்த மரத்தின் கனி, 
 
இன்று
 
மது, மாது, சூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)
மது, மாது, போன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள்,  நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான் மன அமைதி கிடைக்கிறது, அழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும், உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.
 
 
படிப்பினைகள்
 
 
ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடிய, அழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.   
 
 
அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும், அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர். 
 
 
அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
 
 
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
 
 
7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.
 
 
படிப்பினைகள்
 
 
உயர்ந்த படைப்பு நானா ? அவரா ?  என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ?   தாழ்ந்தவர் யார் ?   என்பது தெளிவாகும்.
 
 
ஆதம், ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள். 
 
 
இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.  
 
நமது அன்னை, தந்தையாகிய ஆதம், ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை  கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.
 
இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.
அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !
 
 
இறைவன் கோப குணம் கொண்டவனல்ல, கருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த  இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன், கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.
 
 
·         உலகம் முடியும் காலம் வரை,
 
·         மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,
பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால், பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.
 
 
ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்
 
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.