Popular Posts

Sunday, January 15, 2012

பாங்கு

603. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(தொழுகைக்காக மக்களை அழைப்பது பற்றி ஆலோசனை நடந்த போது) சிலர் நெருபபை மூட்டுவோம் என்றனர். சிலர் மணி அடிப்பதன் மூலம் அழைக்கலாம் என்றனர். அவையெல்லாம் யூத, கிறித்தவ கலாச்சாரம் என்று (சிலரால் மறுத்துக்) கூறப்பட்டது. அப்போது பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தை ஒற்றைப் படையாகவும் கூறுமாறு பிலால்(ரலி) ஏவப்பட்டார்கள்.
Volume :1 Book :10
604. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Volume :1 Book :10
605. அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
606. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
மக்களின் எண்ணிக்கையில் அதிகமானபோது, அவர்கள் அறிந்திருக்கிற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது, நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் எனக் கருத்துச சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
607. அனஸ்(ரலி) அறிவித்தார்.
பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் 'கத்காமதிஸ்ஸலாத்' என்பதைத் தவிர உள்ள இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால்(ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
Volume :1 Book :10
608. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்காக (பாங்கு என்ற) அழைப்புக் கொடுக்கப்படும்போது, பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காகச் சப்தமாகக் காற்றுப் பிரிந்தவனாக ஷைத்தான் புறமுதுகு காட்டி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடிந்ததும் திரும்பி வருகிறான். தொழுகைக்கு இகாமத் கூறும் போதும் ஓடுகிறான். இகாமத் சொல்லி முடிந்ததும் முன்னோக்கி வந்து தொழுகையாளிக்கும் அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அவரின் மனதிற்குமிடையில் இருந்து கொண்டு தொழுகையாளி அதற்கு முன்பு வரை நினைத்திராத விஷயங்களையெல்லாம் அவருக்கு நினைவூட்டி, 'இதை நீ நினைத்துப் பார்; அதை நீ நினைத்துப் பார்,' என்று சொல்லிக் கொண்டு இருப்பான். தொழுகையாளி தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்று சந்தேகம் ஏற்படும் அளவிற்கு ஷைத்தான் அவ்வாறு செய்து கொண்டிருப்பான்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
609. அப்துல்லாஹ் இப்னு அப்திர் ரஹ்மான் அறிவித்தார்.
அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) என்னிடம் 'நீர் ஆடுகளை மேய்ப்பதிலும் காட்டுப் புறங்களுக்குச் செல்வதிலும் ஆசைப்படுவதை காண்கிறேன். நீர் ஆடுகளுடன் சென்றால் அல்லது காட்டுப் புறம் சென்றால் தொழுகைக்காக பாங்கு சொல்லும்போது குரல் உயர்த்திச் சொல்வீராக! காரணம், முஅத்தினுடைய பாங்கு சப்தத்தைக் கேட்கிற ஜின்னாக இருந்தாலும் மனிதனாக இருந்தாலும் வேறு எதுவாக இருந்தாலும் அவருக்காக மறுமை நாளில் பரிந்துரை செய்வார்கள்' எனக் கூறிவிட்டு, இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்ல, கேட்டேன் என்றும் கூறினார்கள்.
Volume :1 Book :10
610. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் எந்தக் கூட்டத்தினரோடாவது போரிடுவதாக இருந்தால் களத்தில் ஸுபுஹ் நேரம் வரும் வரை எங்களைப் போரில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஸுபுஹ் நேரம் வந்ததும் கவனிப்பார்கள். எதிர் தரப்பிலிருந்து பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் தாக்காமலிருப்பதும் கேட்கவில்லையானால் திடீர்த் தாக்குதல் நடத்துவதும் நபி(ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இந்நிலையில் நாங்கள் கைபரை நோக்கிப் புறப்பட்டோம். இரவு நேரத்தில் அந்த இடத்தைச் சென்றடைந்தோம். ஸுபுஹ் நேரம் வந்ததும் பாங்கு சப்தம் கேட்காததால் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் ஏறினார்கள். நான் அபூ தல்ஹாவுக்குப் பின்னால் அவரின் வாகனத்தில் ஏறிக் கொண்டேன். என்னுடைய பாதம் நபி(ஸல்) அவர்களின் பாதத்தில் (அடிக்கடி) படும் (அளவுக்கு நெருக்கமாகச் சென்றோம்), அப்போது கைபர் வாசிகள் தங்களின் மண் வெட்டிகளையும் தானியம் அளக்கும் (மரக்கால் போன்ற) அளவைகளையும் எடுத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும் (கிலியுடன்) 'அல்லாஹ்வின் மீது ஆணையாக அதோ முஹம்மத்! அவரின் படை!' என்றனர். நபி(ஸல்) அவர்கள், அம்மக்களைக் கண்டதும் 'அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்! கைபர் வீழ்ந்தது! நாம் ஒரு கூட்டத்தினரைத் தாக்கினால், அவர்களின் காலைப்போது கெட்டதாயிருக்கும்" என்றார்கள்.
Volume :1 Book :10
611. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள்."
என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
612. ஈஸா இப்னு தல்ஹா அறிவித்தார்.
முஆவியா(ரலி) ஒரு நாள் பாங்கு சப்தத்தைச் செவியுறபோது 'அஷ்ஹது அன்ன முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்' என்பது வரை முஅத்தின் சொல்வது போன்றே கூறினார்கள்.
Volume :1 Book :10
613. யஹ்யா அறிவித்தார்.
முஅத்தின் 'ஹய்ய அலஸ்ஸலாத்' என்று கூறும்போது அதைச் செவியுறுபவர் 'லாஹவ்ல வலா குவ்வத இல்லாபில்லாஹ்' என்று சொல்ல வேண்டும். இவ்வாறுதான் உங்கள் நபியவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன் என முஆவியா(ரலி) கூறினார் என எங்கள் சகோதரர்களில் சிலர் அறிவித்துள்ளனர்.
Volume :1 Book :10
614. சொல்வதைக் கேட்ட பின், 'பூரணமான இந்த அழைப்பின் இரட்சகனான அல்லாஹ்வே! நிலையான தொழுகைக்குரியவனே! முஹமமது நபி(ஸல்) அவர்களுக்கு வஸீலா என்ற அந்தஸ்தையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ வாக்களித்தவாறு புகழுக்குரிய இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!' என்ற துஆவை ஓதுகிறவருக்கு மறுமை நாளில் என்னுடைய பரிந்துரை கிடைத்து விடுகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
615. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
616. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் அறிவித்தார்.
மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் 'ஹய்ய அலஸ்ஸலாஹ்' என்று சொல்ல ஆரம்பித்தபோது 'உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தனர். 'இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூடு அவ்வாறு செய்திருக்கிறார்கள்!' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :1 Book :10
617. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்."
இதை அறிவிக்கும் இப்னு உமர்(ரலி) 'அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் கண்பார்வை இல்லாதவராக இருந்தார். அவரிடம் ஸுபுஹ்நேரம் வந்துவிட்டது என்று கூறப்பட்டால்தான் பாங்கு சொல்வார்' என்று கூறினார்கள்.
Volume :1 Book :10
618. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.
Volume :1 Book :10
619. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸுப்ஹுத் தொழுகை;காக பாங்கு சொல்லப்பட்டதற்கும் இகாமத்திற்குமிடையில் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்.
Volume :1 Book :10
620. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்."
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
621. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் ஸஹர் உணவு உண்ணுவதிலிருந்து பிலாலின் பாங்கு உங்களைத் தடை செய்து விடவேண்டாம். இரவில் தூங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்புவதற்காகவும் தொழுது கொண்டிருப்பவர்கள் திரும்பி வருவதற்காகவும்தான் பிலால் பாங்கு சொல்கிறாரே தவிர ஸுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை அறிவிப்பதற்காக அன்று."
இவ்வாறு கூறிவிட்டுத் தம் கை விரலை மேலும் கீழுமாக உயர்த்தி சைகை செய்தார்கள்.
என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
622. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்"
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10

தொழுகை நேரங்கள்

521. ஸுஹ்ரி அறிவித்தார்.
உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.
இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் "இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள்.
(இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.
Volume :1 Book :9
522. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
சூரிய(னி)ன் (ஒளி) என் அறையில் (மறையாமல்) விழுந்து கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள்.
Volume :1 Book :9
523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!' என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல், நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை, வாய் குறுகலான சுட்ட மண் குடுவை, தார் பூசப்பட்ட பாத்திரம், பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியைக் குடைந்து செய்யப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை(ப் பயன்படுத்துவதை)விட்டும் உங்களைத் தடுக்கிறேன்' என்று கூறினார்கள்.
குறிப்பு: போதைப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப் பட்ட இப்பாத்திரங்களைப் பயன்படுத்தலாகாது என்ற தடை, பின்னர் நபி(ஸல்) அவர்களால் விலக்கிக் கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்க!)
Volume :1 Book :9
524. ஜரீர்பின் அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
தொழுகையை நிலைநாட்டுவது ஸகாத் கொடுப்பது, முஸ்லிம்கள் அனைவருக்கும் நல்லதையே நாடுவது ஆகிய காரியங்களுக்காக நான் அல்லாஹ்வின் தூதரிடம் உறுதிப் பிரமாணம் எடுத்தேன்.
Volume :1 Book :9
525. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் உமர்(ரலி) அவர்களிடம் அமர்ந்திருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் ஃபித்னாவைப் பற்றிக் கூறியதை உங்களில் அறிந்திருப்பவர் யார்? என்று கேட்டார்கள். (ஃபித்னா என்ற வார்த்தைக்குச் சோதனைகள், துன்பங்கள் என்று பொருளும் குழப்பங்கள் என்ற பொருளும் உண்டு.) நபி(ஸல்) அவர்கள் கூறிய மாதிரியே நான் அதை அறிந்திருக்கிறேன் என்றேன். அதற்கு உமர்(ரலி) 'நீர் அதற்குத் தகுதியானவர் தாம்' என்றனர். ஒரு மனிதன் தம் குடும்பத்தினரிடமும் தம் சொத்துக்களிலும் தம் குழந்தைகளிடமும் தம் அண்டை வீட்டாரிடமும் (அளவு கடந்த நேசம் வைப்பதன் மூலம்) ஃபித்னாவில் (சோதனையில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாகும் என்றும் நான் விடையளித்தேன்.
அதற்கு உமர்(ரலி), 'நான் இதைக் கருதவில்லை' என்றனர். 'கடலலை போல் அடுக்கடுக்காக ஏற்படும் (நபிகளால் முன்னறிவிக்கப்பட்ட) ஃபித்னா (குழப்பங்கள்) பற்றியே கேட்கிறேன்' என்று கூறினார்கள். இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அந்தக் குழப்பங்களுக்கும் உங்களுக்கும் யாதொரு சம்மந்தமுமில்லை. உங்களுக்கும் அந்தக் குழப்பங்களுக்கு மிடையே மூடப்பட்ட கதவு உள்ளது என கூறினேன். 'அக்கதவு திறக்கப்படுமா? உடைக்கப்படுமா?' என உமர்(ரலி) கேட்டார்கள். நான் உடைக்கப்படும் என்றேன். 'அப்படியாயின் அது ஒருக்காலும் மூடப்படாது' என்று உமர்(ரலி) கூறினார்.
ஷகீக் கூறினார். அந்தக் கதவு எதுவென உமர்(ரலி) அறிவார்களா? என்று ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம். 'ஆம்! பகலுக்குப் பின்னர் இரவு என்பதை அறிவது போல் அதை உமர்(ரலி) அறிவார்கள். பொய்கள் கலவாத செய்தியையே நான் அவர்களுக்கு அறிவித்தேன்' என்று ஹுதைஃபா(ரலி) கூறினார். அந்தக் கதவு எதுவென ஹுதைஃபா(ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சி, மஸ்ரூக்கைக் கேட்கச் செய்தோம். அதற்கு ஹுதைஃபா(ரலி) 'அந்தக் கதவு உமர்(ரலி) தாம்' என்றார்கள்.
Volume :1 Book :9
526. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். 'பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்" (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் 'இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?' என்று கேட்டதற்கு 'என் சமுதாயம் முழுமைக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
Volume :1 Book :9
527. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டபோது, 'தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்" என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'பெற்றோருக்கு நன்மை செய்தல்" என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். 'இறைவழியில் அறப்போர் புரிதல்" என்றனர். எனக்கு இவற்றை நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி(ஸல்) அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள்.
Volume :1 Book :9
528. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
"உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்" என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :9
529. கைலான் அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்தவற்றில் எதனையும் (இன்று) என்னால் காண முடியவில்லை' என்று அனஸ்(ரலி) குறிப்பிட்டார்கள். 'தொழுகை இருக்கிறதே' என்று அவர்களிடம் கேட்கப் பட்டது. 'அதில் கூட செய்வதையெல்லாம் நீங்கள் (கூடக் குறைய) செய்து விடவில்லையோ? எனத் திருப்பிக் கேட்டார்கள்.
Volume :1 Book :9
530. ஸுஹ்ரீ அறிவித்தார்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி) 'டமாஸ்கஸ்' நகரிலிருக்கும்போது நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் அழுது கொண்டிருந்தனர். 'ஏன் அழுகிறீர்கள்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நான் கண்டவைகளில் இந்தத் தொழுகையைத் தவிர வேறு எதனையும் என்னால் (இன்றைய சமூகத்தில்) காண முடியவில்லை. அந்தத் தொழுகையும் கூட பாழ்படுத்தப் பட்ட நிலையிலுள்ளது' என அனஸ்(ரலி) கூறினார்.
Volume :1 Book :9
531. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் தொழும்போது தம் இறைவனிடம் தனிமையில் உரையாடுகிறார். எனவே தம் வலப்புறம் துப்ப வேண்டாம். எனினும் தம் இடது பாதத்திற்குக் கீழே துப்பிக் கொள்ளலாம்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
"தமக்கு முன் புறமாகத் துப்பலாகாது; எனினும் தம் இடது புறமாகவோ, தம் பாதங்களுக்குக் கீழேயோ, துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என கதாதா குறிப்பிட்டார்கள்.
"தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்ப வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷஃபா குறிப்பிடுகிறார்.
"கிப்லாத் திசையிலோ தம் வலப்புறமோ துப்பலாகாது; எனினும் தம் இடப்புறமோ, தம் பாதத்தின் கீழேயோ துப்பிக் கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) வழியாக ஹுமைத் அறிவித்தார்.
Volume :1 Book :9
532. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைப்பிடியுங்கள்! கைகளை நாய் விரிப்பது போல் விரிக்கலாகாது! துப்பும்போது தமக்கு முன்புறமோ தம் வலப்புறமோ துப்பலாகாது! ஏனெனில் அவர் தம் இறைவனுடன் தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கிறார்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
533. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
535. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் முஅத்தின், லுஹருக்கு பாங்கு சொல்ல முற்பட்டபோது நபி(ஸல்) அவர்கள் 'கொஞ்சம் பொறு; கொஞ்சம் பொறு" என்று கூறிவிட்டு, 'கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துங்கள்!" என்றார்கள். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை நபி(ஸல்) அவர்கள் தாமதப் படுத்துவார்கள். (சூரியன் நன்றாகச் சாய்ந்து அஸருக்குச் சற்று முன்பாகத்தான் மணல் திட்டுகளின் நிழல் தென்படும்.)
Volume :1 Book :9
536. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப் படுத்துங்கள்! ஏனெனில் கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
537. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இறைவா! என்னுடைய ஒரு பகுதி, மறுபகுதியைச் சாப்பிட்டுவிட்டது என்று நரகம் இறைவனிடம் முறையிட்டது. கோடையில் ஒரு மூச்சு விடுவதற்கும் குளிரில் ஒரு மூச்சு விடுவதற்கும் இறைவன் அதற்கு அனுமதி வழங்கினான். கோடை காலத்தில் நீங்கள் காணும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் நீங்கள் உணரும் கடும் குளிரும் அதன் வெளிப்பாடுகள் தாம்."
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
538. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"வெப்பம் கடுமையாகும்போது (வெப்பம் தணியும் வரை) லுஹரைத் தாமதப்படுத்துங்கள்! ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் வெப்பக் காற்றின் வெளிப்படாகும்."
என அபூ ஸயீது(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :9
539. அபூ தர்(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். முஅத்தின் லுஹருக்கு பாங்கு சொல்ல முனைந்தபோது, 'கொஞ்சம் பொறு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் மீண்டும் பாங்கு சொல்ல அவர் முனைந்தபோது 'கொஞ்சம் பொறு' என்றனர். மணல் திட்டுகளின் நிழலை நாங்கள் பார்க்கும் வரை தாமதப்படுத்தினார்கள். 'கடுமையான வெப்பம், நரக வெப்பத்தின் வெளிப்பாடாகும். எனவே வெப்பம் கடுமையாகும்போது (லுஹர்) தொழுகையைத் தாமதப் படுத்துங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Volume :1 Book :9
540. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் சூரியன் சாய்ந்தபோது வெளியே வந்து லுஹர் தொழுதார்கள். மிம்பர் (மேடை) மீது ஏறி உலக முடிவு நாள் பற்றியும் குறிப்பிட்டார்கள். அந்நாளில் பயங்கரமான பல காரியங்கள் நிகழும் என்றும் குறிப்பிட்டார்கள். 'எதைப் பற்றியேனும் எவரேனும் கேட்க விரும்பினால் அவர் என்னிடம் கேட்கலாம். இந்த இடத்தில் நான் இருக்கும் வரை நீங்கள் எதைப் பற்றிக் கேட்டாலும் உங்களுக்கு அறிவிக்காதிருக்க மாட்டேன்" என்றும் குறிப்பிட்டார்கள். மக்கள் மிகுதியாக அழலானார்கள். நபி(ஸல்) அவர்கள் 'என்னிடம் கேளுங்கள்" என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஹுதாபா' என்பவரின் மகன் அப்துல்லாஹ் என்பவர் எழுந்து 'என் தந்தை யார்?' என்று கேட்டார். 'உன் தந்தை ஹுதாபா" என்று நபி(ஸல்) கூறிவிட்டு 'என்னிடம் கேளுங்கள்" என்று மிகுதியாகக் குறிப்பிட்டார்கள். (இந்நிலையைக் கண்ட) உமர்(ரலி) மண்டியிட்டமர்ந்து 'அல்லாஹ்வை இரட்சகனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத்(ஸல்) அவர்களை நபி என்றும் நாங்கள் திருப்தியுடன் ஏற்றோம்' என்று கூறியதும் நபி(ஸல்) அவர்கள் மவுனமானார்கள். பின்னர் 'சற்று முன் இந்தச் சுவற்றின் நடுவில் சுவர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. (அவ்விடத்தில் கண்டது போல்) நல்லதையும் கெட்டதையும் நான் கண்டிருக்கவில்லை" என்றார்கள்.
Volume :1 Book :9

தொழுகை

349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
350. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
352. 'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
Volume :1 Book :8
353. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்' என்று கூறினார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.
Volume :1 Book :8
354. 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
355. 'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
356. 'உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுததை பார்த்திருக்கிறேன்" என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்.
Volume :1 Book :8
357. 'மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு, நான் நபி(ஸல்) அவர்களிடம் நான் சென்றிருந்தபோது அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் மகள் ஃபாத்திமா(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குத் திரையிட்டார். நான் நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அப்போது, 'யாரவர்?' எனக் கேட்டார்கள். 'நான் அபூ தாலிபின் மகள் உம்முஹானி' என்றேன். உடனே, 'உம்முஹானியே! வருக!' என்றார்கள். நபி(ஸல்) குளித்து முடித்த பின்னர் ஒரே ஆடையைச் சுற்றியவர்களாக எட்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அவர்கள் தங்கள் தொழுகையை முடித்ததும் 'இறைத்தூதர் அவர்களே! என்னுடைய சகோதரர் நான் அடைக்கலம் அளித்திருக்கும் ஹுபைராவின் மகனைக் கொலை செய்ய எண்ணியுள்ளார்' என்று நான் கூறியபோது 'உம்மு ஹானியே! நீ அடைக்கலம் அளித்திருப்பவருக்கு நாங்களும் அடைக்கலம் அளிக்கிறோம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இச்சம்பவம் முற்பகலில் நடந்தது" என உம்மு ஹானி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
358. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, 'உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
359. 'உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
360. 'ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்' (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
361. 'நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, 'நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை முடித்ததும், 'ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறிர்?' என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் 'இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி(ஸல்) அவர்கள், 'ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்' என்றார்கள்' என்று ஜாபிர்(ரலி) விடையளித்தார்கள்" என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.
Volume :1 Book :8
362. 'சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், 'ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்' என்று கூறினார்கள்" என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
363. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றபோது, 'முகீராவே! தண்ணீர்ப் பாத்திரத்தை எடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் அதை எடுத்துக் கொண்டேன். நபி(ஸல்) அவர்கள் நடந்து சென்று என் கண்ணுக்குத் தெரியாத மறைவான இடத்திற்குச் சென்று அவர்களின் இயற்கைத் தேவையை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டுக் குளிர் ஆடையை அணிந்திருந்தார்கள். உளூச் செய்வதற்காக அதிலிருந்து தங்களின் கையை வெளியே எடுக்க முயன்றார்கள். அதன் கை இறுக்கமாக இருந்ததால் தங்களின் கையை அந்த ஆடையின் கீழ்ப்புறமாக வெளியே எடுத்தார்கள். நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். தங்களின் இரண்டு காலுறைகளின் மீதும் (அவற்றைக் கழுவாமல்) ஈரக்கையால் மஸஹ் செய்து (தடவி) தொழுதார்கள்" என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
364. 'நபி(ஸல்) அவர்கள், (சிறு வயதில்) கஅபதுல்லாஹ்வின் கட்டுமானப் பணி நடந்தபோது அதைக் கட்டுபவர்களோடு கற்களை எடுத்துச் சென்றார்கள். அப்போது அவர்கள் ஒரு வேஷ்டி அணிந்திருந்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ் 'என் சகோதரனின் மகனே! உன் வேஷ்டியை அவிழ்த்து அதை உன் தோளின் மீது வைத்து அதன் மேல் கல்லை எடுத்துச் சுமந்து வரலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அவ்வாறே நபி(ஸல்) வேஷ்டியை அவிழ்த்து அதைத் தங்களுடைய தோளின் மீது வைத்தார்கள். வைத்ததும் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்தார்கள். அதற்கு பின்னர் நபி(ஸல்) அவர்கள் நிர்வாணமாக ஒருபோதும் காட்சியளிக்கவில்லை" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
365. நபி(ஸல்) அவர்களிடம் ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுவது பற்றிக் கேட்டதற்கு 'உங்களில் எல்லோரும் இரண்டு ஆடைகளை வைத்திரக்கிறார்களா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
(உமர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்தில்) பின்னர் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் இது விஷயமாக கேட்டதற்கு 'அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். சிலர் எல்லா ஆடைகளையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதார்கள். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டை, மேல் போர்வையும் அணிந்து தொழுதார்கள். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் மேல் அங்கியும் அணிந்து சிலர் தொழுதார்கள். அரைக்கால் சட்டையும் சட்டையும் அணிந்தவராகச் சிலர் தொழுதார்கள். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள். வேஷ்டியும் சட்டையும் என்பதற்குப் பதிலாக வேஷ்டியும் மேல் போர்வையும்' என்று உமர்(ரலி) கூறியதாக நான் நினைக்கிறேன்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
366. 'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
367. 'கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுககமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, மர்மஸ்தானம் தெரியும் படியாக இரண்டு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்" என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
368. முனாபதா' 'முலாமஸா' எனும் இருவகை வியாபாரங்களையும், கையை வெளியே எடுக்க இயலாத அளவுக்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும், ஒரே ஆடையை அணிந்திருக்கும்போது, இரண்டு முட்டுக் கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்" என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'முனாபதா' குறிப்பிட்ட ஒரு பொருளை எடுத்து எறியும்போது அது எந்தப் பொருளின் மீது படுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பதைக் குறிக்கும்.
'முலாமஸா' குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதித்து விற்பதைக் குறிக்கும்.)
Volume :1 Book :8

தயம்மும்

334. நாங்கள் ஒரு பயணத்தில் நபி(ஸல்) அவர்களுடன் சென்றோம். 'பைதாவு' அல்லது 'தாத்துல் ஜைஷ்' என்ற இடத்தை வந்தடைந்ததும் என்னுடைய கழுத்தணி அறுந்து (தொலைந்து)விட்டது. அதைத்தேடுவதற்காக நபி(ஸல்) அவர்களும் மற்றவர்களும் அந்த இடத்தில் தங்கினோம். நாங்கள் தங்கிய இடத்தில் தண்ணீர் இல்லை. அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சிலர் வந்து, '(உங்கள் மகளான) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் இங்கே தங்கச் செய்துவிட்டார். அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களுடனும் தண்ணீர் எடுத்து வரவில்லை' என்று முறையிட்டனர். அபூ பக்ர்(ரலி) (என்னருகே) வந்தபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலையை என்னுடைய மடி மீது வைத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 'நபி(ஸல்) அவர்களையும் மக்களையும் தங்க வைத்துவிட்டாயே? அவர்கள் தங்கிய இடத்திலும் தண்ணீர் இல்லை; அவர்களிடமும் தண்ணீர் இல்லை' என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல அல்லாஹ் நாடினானோ அதையெல்லாம் சொல்லிவிட்டு, தங்களின் கையால் என்னுடைய இடுப்பில் குத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் தலை என் மடியின் மீது இருந்ததால் நான் அசையாது இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் காலையில் விழித்தெழிந்தபோதும் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அல்லாஹ் தயத்தின் வசனத்தை அருளினான். எல்லோரும் தயம்மும் செய்தார்கள்.
இது பற்றிப் பின்னர் உஜைத் இப்னு ஹுளைர்(ரலி) 'அபூ பக்ரின் குடும்பத்தார்களே! உங்களின் மூலமாக ஏற்பட்ட பரக்கத்துக்களில் இது முதலாவதாக இல்லை. (இதற்கு முன்பும் உங்களின் மூலம் எத்தனையோ பரக்கத்துக்கள் ஏற்பட்டுள்ளன)' எனக் கூறினார். அப்போது நான் இருந்த ஒட்டகத்தை எழுப்பியபோது அதனடியில் (காணாமல் போன) என் கழுத்தணி கிடந்ததைக் கண்டோம்"என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
335. 'எனக்கு முன்னர் யாருக்கும் கொடுக்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. எதிரிகளுக்கும் எனக்குமிடையில் ஒரு மாத காலம் பயணம் செய்யும் இடைவெளியிருந்தாலும் அவர்களின் உள்ளத்தில் பயம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் நான் உதவப்பட்டுள்ளேன். பூமி முழுவதும் சுத்தம் செய்யத் தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என்னுடைய சமுதாயத்தில் தொழுகையின் நேரத்தை அடைந்தவர் (இருக்கும் இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்! போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை. (மறுமையில்) சிபாரிசு செய்யும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளேன். ஒவ்வொரு நபியும் தங்களின் சமூகத்திற்கு மட்டுமே நபியாக அனுப்பட்டார்கள். ஆனால், மனித இனம் முழுமைக்கும் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
336. 'ஆயிஷா (தங்களின் சகோதரி) அஸ்மாவிடமிருந்து ஒரு கழுத்தணியை இரவல் வாங்கியிருந்தார். அந்தக் கழுத்தணி காணாமல் போனது. இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் கழுத்தணியைத் தேடி வருமாறு கூறினார்கள். தேடிப்போனவர் அதைக் கண்டெடுத்தார். தேடிப் போன அந்த இடத்தில் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. எனவே (உளூவின்றித்) தொழுதுவிட்டார். இதைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது அல்லாஹ் தயம்முடைய வசனத்தை அருளினான். அப்போது உஜைத் இப்னு ஹுளைர் என்பவர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியைத் தருவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் வெறுக்கக் கூடிய எந்த ஒரு விஷயம் உங்களுக்கு ஏற்பட்டாலும், அதை உங்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கும் நலமானதாக அல்லாஹ் ஆக்கி விடுகிறான்' என்று கூறினார்" என உர்வா அறிவித்தார்.
Volume :1 Book :7
337. 'நானும் நபி(ஸல்) அவர்களின் மனைவியான மைமூனாவின் அடிமை அப்துல்லாஹ் இப்னு யஸாரும் அபூ ஜுஹைம் இப்னு அல்ஹாரிது இப்னு அஸ்ஸிம்மத்தில் அன்ஸாரி(ரலி) அவர்களிடம் சென்றோம். 'எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் 'பீர்ஜமல்' என்ற இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது ஒருவர் அவர்களை சந்தித்து ஸலாம் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் பதில் சொல்லாமல் ஒரு சுவர் பக்கம் சென்று (அதில் கையை அடித்து) தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் தடவிய பின்னர் அவரின் ஸலாத்திற்கு பதில் கூறினார்கள்' என்று அபூ ஜுஹைம்(ரலி) கூறினார்" என உமைர் என்பவர் அறிவித்தார்.
Volume :1 Book :7
338. 'ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் வந்து 'நான் குளிப்புக் கடமையானவனாக ஆகிவிட்டேன். தண்ணீர் கிடைக்கவில்லை. என்ன செய்யவேண்டும்?' என்று கேட்டபோது, அங்கிருந்த அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'நானும் நீங்களும் ஒரு பயணத்தில் சென்றோம். (அப்போது தண்ணீர் கிடைக்காததால்) நீங்கள் தொழவில்லை; நானோ மண்ணில் புரண்டுவிட்டுத் தொழுதேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்து, அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தங்களின் முகத்தையும் இரண்டு முன்கைகளையும் தடவிக் காண்பித்து 'இவ்வாறு செய்திருந்தால் அது உனக்குப் போதுமானதாக இருந்தது' எனக் கூறிய சம்பவம் உங்களுக்கு நினைவில்லையா?' என்று கேட்டார்கள்" என அப்துர்ரஹ்மான் அப்ஸா(ரலி) கூறினார்.
Volume :1 Book :7
339. முந்திய ஹதீஸ் இங்கே இடம் பெறுகிறது. அத்துடன் 'ஷுஅபா' என்பவர் இரண்டு கைகளால் பூமியில் அடித்து அவற்றைத் தம் வாயின் பக்கம் நெருக்கி (ஊதிவிட்டு) பின்னர் தம் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவினார்" என்று குறிப்பிட்டார் எனக் குறிப்பிடப்படுகிறது.
Volume :1 Book :7
340. நான் உமர்(ரலி) அவர்களிடமிருந்தேன். அப்போது அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் 'நாம் ஒரு பயணத்தில் சென்றபோது குளிப்புக் கடமையாகிவிட்டது' என்று கூறி (தயம்மும் செய்து காட்டினார்கள். அப்போது) இரண்டு கைகளிலும் ஊதிக் காட்டினார்கள்" என அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
341. 'நானோ மண்ணில் புரண்டேன். இந்நிகழ்ச்சியை நபி(ஸல்) அவர்களிடம் சொன்னபோது அவர்கள் முன்கைகளும் முகமும் போதுமானதாக இருந்தது' என அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்' என்று குறிப்பிட்டார்" அப்துர்ரஹ்மான் இப்னு அப்ஸா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
342. முந்திய ஹதீஸே இங்கு மீண்டும் இடம் பெற்றுள்ளது.
Volume :1 Book :7
343. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளையும் தரையில் அடித்துத் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் தடவிக் காண்பித்தார்கள்" என அம்மார்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
344. நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணம் சென்றோம். இரவின் கடைசி நேரம் வந்தபோது எங்களுக்கு தூக்கம் மேலிட்டது. பயணிக்கு அதைவிட இன்பமான தூக்கம் எதுவும் இருக்க முடியாது. அந்தத் தூக்கத்திலிருந்து எங்களை (அதிகாலை) சூரிய வெப்பம்தான் எழுப்பியது. முதல் முதலாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் இன்னவர், அடுத்த இன்னவர் அவரை அடுத்து இன்னவர் இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ரஜா எழுந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுக் கூறினார். அவருக்கு அடுத்த அறிவிப்பாளரான அவ்ஃப் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார். நான்காவதாகத் தூக்கத்திலிருந்து எழுந்தவர் உமர் இப்னு கத்தாப்(ரலி) ஆவார்கள்."
நபி(ஸல்) அவர்கள் தூங்கினால் அவர்கள் தாமாகவே தூக்கத்திலிருந்து விழிக்கும் வரை வேறு யாராலும் எழுப்பப்பட மாட்டார்கள். காரணம் அவர்களின் தூக்கத்தில் என்ன செய்தி வருமென்பது எங்களுக்குத் தெரியாது. உமர்(ரலி) தூக்கத்தைவிட்டு எழுந்து மக்களுக்கு ஏற்பட்ட (ஸுப்ஹ் தொழுகை தவறிப்போன) இந்நிலையைப் பார்த்ததும் அல்லாஹு அக்பர்!' என்று சப்தமிட்டார். அவர் திடகாத்திரமான மனிதராக இருந்தார். அவர் சப்தமிட்டுத் தக்பீர் முழங்கிக் கொண்டே இருந்தார். அவர்களின் சப்தத்தைக் கேட்டு நபி(ஸல்) அவர்களும் தூக்கத்திலிருந்து எழுந்தார்கள். உடனே மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது 'அதனால் எந்தப் பாதிப்புமில்லை. நீங்கள் இங்கிருந்து புறப்படுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டும் புறப்பட்டார்கள். சிறிது தூரம் சென்றதும் அங்கே தங்கி உளூச் செய்யத் தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் உளூச் செய்தார்கள். தொழுகைக்காக அழைப்புக் கொடுக்கப்பட்டது. மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துவிட்டு திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஒருவர் கூட்டத்துடன் தொழாமல் தனியாக இருந்தார். 'ஜமாஅத்துடன் நீர் தொழாமலிருக்கக் காரணமென்ன?' என்று அவரிடம் கேட்டபோது, 'எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் இல்லை' என்று அவர் கூறினார். 'மண்ணில் தயம்மும் செய். அது உனக்குப் போதுமானது' என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள்.
பின்னர் நபி(ஸல்) அவர்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது மக்கள் அவர்களிடம் சென்று 'தாகமாக இருக்கிறது; தண்ணீர் இல்லை' என முறையிட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்திலிருந்து இறங்கி, ஒரு மனிதரையும் அவர் பெயரை அபூ ரஜா குறிப்பிட்டார்கள். அவ்ஃப் என்பவர் மறந்துவிட்டார். அலீ(ரலி) அவர்களையும் அழைத்து' நீங்கள் இருவரும் சென்று தண்ணீரைத் தேடுங்கள்' என்று கூறினார்கள். அவர்கள் இருவரும் தண்ணீரைத் தேடிச் சென்று கொண்டிருந்தபோது, வழியில் ஒரு பெண்ணைச் சந்தித்தார்கள். அவள் ஓர் ஒட்டகத்தின் மீது இரண்டு தோல் பைகளில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதற்கிடையில் அமர்ந்திருந்தாள்.
'தண்ணீர் எங்கே கிடைக்கிறது?' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கேட்டனர். 'தண்ணீர் ஒரு நாள் பயண தூரத்தில் இருக்கிறது. எங்களுடைய ஆண்கள் தண்ணீருக்காகப் பின்தங்கிவிட்டனர்' என அப்பெண் கூறினாள். 'அப்படியானால் நீ புறப்படு' என்று அவ்விருவரும் அப்பெண்ணிடம் கூறினார்கள். 'எங்கே?' என்று அவள் கேட்டாள். 'அல்லாஹ்வின் தூதரிடம்' என்று கூறினார்கள். 'மதம் மாறியவர் என்று கூறப்படுகிறாரே அவரிடத்திலா?' என்று அப்பெண் கேட்டாள். 'நீ கூறுகிற அவரேதான்' என்று கூறிவிட்டு அவளை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து நடந்ததைக் கூறினார்கள்.
'அந்தப் பெண்ணை அவளுடைய ஒட்டகத்திலிருந்து இறங்கச் செல்லுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அந்த இரண்டு தோல் பைகளிலிருந்த தண்ணீரைப் பாத்திரங்களில் நிரப்பினார்கள். பின்னர் அந்த இரண்டு தோல் பைகளின் அடிப்புற வாயைக் கட்டிவிட்டுத் தண்ணீர் செலுத்தும் மேற்புற வாயைக் கட்டாமல்விட்டுவிட்டார்கள். 'எல்லோரும் வந்து தண்ணீர் குடியுங்கள். சேகரித்து வையுங்கள்' என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. விரும்பியவர்கள் குடித்தார்கள்; விரும்பியவர்கள் பாத்திரங்களில் எடுத்து வைத்தார்கள். குளிப்புக் கடமையான அவர்தாம் கடைசியாக வந்தவர். அவருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் கொடுத்து, 'இதைக் கொண்டு போய் உம் மீது ஊற்றிக் கொள்ளும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்தப் பெண் தன்னுடைய தண்ணீர் எந்தெந்த வகையிலெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனித்துக் கொண்டே நின்றாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவளுடைய உள்ளத்தில் நபி(ஸல்) மீது இருந்த வெறுப்பு நீங்கிவிட்டது. அந்த இரண்டு தோல் பைகளிலிருந்து முதலில் தண்ணீரை எடுக்கும்போது இருந்ததை விட அதிகமான தண்ணீர் பிறகு அத்தோல் பையில் இருப்பது போன்று எங்களுக்குத் தெரிந்தது. (தண்ணீர் குறையவில்லை.) 'அந்தப் பெண்ணுக்கு ஏதாவது சேகரித்துக் கொடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவளுக்காகப் பேரீச்சம் பழம், மாவு போன்றவற்றைச் சேகரித்தார்கள். அவளுக்குப் போதுமான உணவு சேர்ந்தது. அதைத் துணியில் வைத்துக் (கட்டி) அவளை ஒட்டகத்தின் மீது அமரச் செய்து உணவுப் பொட்டலமுள்ள துணியை அவளுக்கு முன்னால் வைத்தார்கள். பின்னர், அந்தப் பெண்ணிடம் 'உன்னுடைய தண்ணீரிலிருந்து எதையும் நாங்கள் குறைக்கவில்லை; அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் புகட்டினான்' என்பதைத் தெரிந்து கொள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்தப் பெண் தன்னுடைய குடும்பத்தினரிடம் குறிப்பிட்ட நேரத்தை விடத் தாமதமாக வந்தபோது, 'பெண்ணே! நீ பிந்தி வரக்காரணமென்ன?' என்று கேட்டதற்கு 'ஓர் ஆச்சரியமான விஷயம் நிகழ்ந்தது. இரண்டு மனிதர்கள் என்னைச் சந்தித்து மதம் மாறியவர் என்று கூறப்படக் கூடிய அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படியெல்லாம் செய்தார்' (என நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள்.)
அவள் தன் கையின் நடுவிரலையும், ஆட்காட்டி விரலையும் வானத்தின் பக்கம் உயர்த்தி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த வானத்திற்கும் இந்த பூமிக்கும் இடையிலுள்ள சூனியக்காரர்களில் அவர் மிகச் சிறந்தவராக இருக்க வேண்டும். அல்லது அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர் இறைத்தூதராக இருக்க வேண்டும்' என்று கூறினாள்.
பின்னர் முஸ்லிம்கள் அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்தவர்களை எதிர்த்துப் போராடினார்கள். அப்போது அந்தப் பெண் எந்தக் குடும்பத்தைச் சார்ந்துள்ளாளோ அந்தக் குடும்பத்தை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஒரு முறை அந்தப் பெண் தங்களின் கூட்டத்தாரிடம், 'இந்த முஸ்லிம்கள் வேண்டுமென்றே (உங்களிடம் போரிடாமல்) உங்களைவிட்டு விடுகிறார்கள் என்றே கருதுகிறேன். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?' என்று கேட்டபோது அவர்கள் எல்லோரும் அவளுடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என இம்ரான்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
345. (குளிப்புக் கடமையானவருக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டாலும் அவர் தொழ வேண்டாமல்லவா?' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் சலுகையளித்தால் குளிர் ஏற்பட்டால் கூட மக்கள் தயம்மும் செய்து தொழ ஆரம்பித்து விடுவார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அம்மார் இப்னு யாஸிர்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் ('தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்தால் போதுமானது' என்று) சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என்று அவர் கேட்டார். அதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறியபோது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை' என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கேட்டார்.
'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ?' என ஷகீக் அவர்களிடம் நான் கேட்டதற்கு, அவர் 'ஆம்! எனப் பதிலளித்தார்கள்" என அஃமஷ் அறிவித்தார்.
Volume :1 Book :7
346. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அபூ மூஸ அல் அஷ்அரி(ரலி) ஆகியோருடன் நானும் இருந்தபோது அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'அபூ அப்திர்ரஹ்மானே! குளிப்புக் கடமையானவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறியபோது, 'நபி(ஸல்) அவர்கள் அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அவர்களிடம், 'தண்ணீர் கிடைக்காவிட்hல் தயம்மும் செய்தால் போதுமானது' என்று சொன்ன செய்தியை நீர் என்ன செய்வீர்?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, '(அம்மார்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம் அச்செய்தியைக் கூறிய போது) அதை உமர்(ரலி) ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உமக்குத் தெரியாதா?' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) பதில் கூறினார். அப்போது, 'அம்மார்(ரலி) அறிவிப்பதைவிட்டு விடுங்கள். 'தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள்' என்ற இந்த இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் நாம் அவர்களுக்கு அனுமதி வழங்கிவிட்டால் யாருக்காவது தண்ணீர் கொஞ்சம் குளிராகத் தெரிந்தால் அதில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு தயம்மும் செய்வார்' என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) தாம் சொல்லக்கூடிய இந்த வார்த்தையின் விபரீதத்தைப் புரியாமலே சொல்லிவிட்டார்.
இதற்காகத்தான் தயம்மும் செய்வதை அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) வெறுத்திருக்கக் கூடுமோ? என ஷகீம்டம் நான் கேட்டதற்கு அவர் 'ஆம்! என்றார்" என அஃமஷ் அறிவித்தார்.
Volume :1 Book :7
347. நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) மற்றும் அபூ மூஸல் அஷ்அரி(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தேன். அபூ மூஸா(ரலி) அப்துல்லாஹ் இப்னுமஸ்வூத்(ரலி) அவர்களிடம் 'குளிப்புக் கடமையானவர் ஒரு மாத காலம் வரை தண்ணீரைப் பெறவில்லையானால் அவர் தயம்மும் செய்து தொழ வேண்டியதில்லையா? 'மாயிதா' என்ற அத்தியாயத்தில் வரும், 'நீங்கள் தண்ணீரைப் பெறவில்லையானால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்யுங்கள்' என்ற வசனத்தை என்ன செய்வீர்கள்?' என்று கேட்டதற்கு, 'இந்த விஷயத்தில் பொது அனுமதி கொடுக்கப்பட்டால், தண்ணீர் கொஞ்சம் குளிராக இருக்கும் போதெல்லாம் (மக்கள்) தண்ணீரில் உளூச் செய்வதைவிட்டுவிட்டு மண்ணில் தயம்மும் செய்து விடுவார்கள்' என்று அப்துல்லா இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். அப்போது 'இதற்காகத்தான் தயம்மும் செய்வதை நீங்கள் வெறுத்தீர்களா?' என்று நான் கேட்டதற்கு 'ஆம்!' என்று பதிலளித்தபோது, 'என்னை ஒரு வேலைக்காக நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தபோது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பிராணிகள் மண்ணில் புரளுவது போன்று புரண்டேன். இச்செய்தியை நபி(ஸல்) அவர்களிடம் நான் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைகளால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் இரண்டு கைகளையும் தட்டிவிட்டு, தங்களின் வலக்கரத்தால் இடது புறங்கையைத் தடவினார்கள். அல்லது தங்களின் இடக்கரத்தால் வலப்புறங்கையைத் தடவினார்கள். பின்னர் இரண்டு கைகளால் தங்களின் முகத்தைத் தடவிவிட்டு 'இப்படிச் செய்வது உமக்குப் போதுமானதாக இருந்தது' என்று கூறினார்கள்' என்ற செய்தியை 'உமர்(ரலி) அவர்களிடம், அம்மார் சொன்னதை நீங்கள் கேள்விப்படவில்லையா?' என அபூ மூஸா(ரலி) கேட்டதற்கு, 'அம்மார் சொன்னதில் உமர்(ரலி) திருப்திப்படவில்லை' என்பது உமக்குத் தெரியாதா? என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) திரும்பக் கேட்டார்" என ஷகீக் அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பில்: 'நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), அபூ மூஸா(ரலி) ஆகிய இருவருடன் அமர்ந்திருந்தபோது, அபூ மூஸா(ரலி), அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நோக்கி 'என்னையும் உங்களையும் நபி(ஸல்) அவர்கள் (ஒரு வேலைக்காக) அனுப்பியபோது எனக்குக் குளிப்புக் கடமையாகி மண்ணில் நான் புரண்டதும், பின்னர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னபோது நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தையும் இரண்டு முன் கைகளையும் ஒரு முறை தடவிவிட்டு 'இப்படி நீர் செய்திருந்தால் அது உமக்குப் போதுமானது' என்று கூறினார்கள்' என உமர்(ரலி) அவர்களிடம் அம்மார்(ரலி) கூறியதை நீர் கேள்விப்பட்டதில்லையா' என அபூ மூஸா(ரலி) கேட்டார்" என ஷகீக்' வாயிலாக 'யஃலா' அறிவித்தார்.
Volume :1 Book :7
348. 'ஒருவர் ஜமாஅத்துடன் தொழாமல் தனியாக இருப்பத்தைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'நீர் ஏன் ஜமாஅத்துடன் தொழவில்லை?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'இறைத்தூதர் அவர்களே! எனக்குக் குளிப்புக் கடமையாகிவிட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை' என்று கூறியபோது 'மண்ணில் தயம்மும் செய்யும்! அது உமக்குப் போதுமானது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இம்ரான் இப்னு ஹுஸைன் அல் குஸாயீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :7
தொழுகை
349. நான் மக்காவில் இருந்தபோது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கி என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடி கையைப் பிடித்து முதல் வானத்திற்கு என்னை ஏற்றிச் சென்றார்கள். முதல் வானத்தை அடைந்ததும் அந்த வானத்தின் காவலரிடம் 'திற' என்றார்கள். அவ்வானவர், 'யார் அவர்?' என்று வினவியதற்கு 'நானே ஜிப்ரீல்' என்று பதில் கூறினார். அதற்கு அவ்வானவர், 'உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்' என்று கூறினார்கள். அதற்கு வானவர் 'அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?' எனக் கேட்டார். ஜிப்ரீல் 'ஆம்' என்றார்கள்.
வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அப்போது அங்கு ஒருவர் அமர்ந்திருந்தார். அவரின் வலப்பக்கம் சில மனிதர்களும் இடது மக்களும் சில மனிதர்களும் காணப்பட்டார்கள். அவர் தங்களின் வலப்பக்கமுள்ள மனிதர்களைப் பார்த்தால் சிரிக்கிறார். தங்களின் இடப்பக்கமுள்ளவர்களைப் பார்த்தால் அழுகிறார்.
இந்நிலையிலுள்ள அவர் 'நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!' என்றார். அப்போது ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். 'இவர் தாம் ஆதம். அவரின் வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ளவர்கள் அவரின் சந்ததிகளிலுள்ள மனிதர்கள். வலப்பக்கமுள்ளவர்கள் சுவர்க்கவாசிகள்; இடப்பக்கமுள்ளவர்கள் நரகவாசிகள். (எனவேதான்) அவர் தங்களின் வலப்பக்கம் பார்த்துச் சிரிக்கிறார்; தங்களின் இடப்பக்கம் பார்த்து அழுகிறார்' என்று கூறினார்கள்.
பின்னர், ஜிப்ரீல்(அலை) என்னை இரண்டாவது வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அந்த வானத்தில் காவலரிடம் 'திற' எனக் கூறினார். முதல் வானத்தின் காவலர் கேட்ட கேள்விகளைப் போன்றே இவரும் கேட்டுவிட்டுத் திறந்தார். இந்த ஹதீஸை அறிவிக்கும் அனஸ்(ரலி), 'வானங்களில் ஆதம், இத்ரீஸ், மூஸா, ஈஸா, இப்ராஹீம்(அலை) ஆகிய நபிமார்களைக் கண்டதாக நபி(ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் வானத்தில் ஆதம்(அலை) அவர்களையும் ஆறாவது வானத்தில் இப்ராஹீம்(அலை) அவர்களையும் கண்டதாகக் குறிப்பிட்டார்கள். மற்ற நபிமார்களைக் கண்ட இடத்தைக் கூறவில்லை' என்று கூறினார்.
'ஜிப்ரீல்(அலை) என்னை அழைத்துக்கொண்டு இத்ரீஸ்(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் இத்ரீஸ்(அலை)' என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.
பின்னர் மூஸா(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர்தான் மூஸா(அலை)' என ஜிப்ரீல் கூறினார்கள்.
பின்னர் ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது 'நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!' எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, 'இவர் ஈஸா(அலை)' என ஜிப்ரீல்(அலை) கூறினார்கள்.
பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது 'நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!" என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, 'இவர் இப்ராஹீம்(அலை)' என்று கூறினார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அபூ ஹப்பா அல் அன்ஸாரி(ரலி) ஆகியோர் அறிவிக்கும் மற்றோர் அறிவிப்பில், 'பின்னர் நான் மேலே கொண்டு செல்லப்பட்டேன். நான் ஏணியில் ஏறிச் சென்றபோது எழுது கோல்களால் எழுதும் சப்தத்தை செவியுற்றேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.த (தொடர்ந்து)
"அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது 'உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?' என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது' என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). 'நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது' என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது 'ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை' என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது 'உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்' என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன். பின்னர் ஜிப்ரீல்(அலை) என்னை 'ஸித்ரதுல் முன்தஹா' என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அதைப் பல வண்ணங்கள் சூழந்திருந்தன. அது என்ன என்பது எனக்குப் புலப்படவில்லை. பின்னர் சுவர்க்கத்தில் புகுத்தப்பட்டேன். அதில் முத்துக்களால் உள்ள கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ தர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
350. 'அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது ஊரிலிருந்தாலும் பயணத்திலிருந்தாலும் இரண்டிரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான், பயணத்தில் தொழுகை இரண்டு ரகஅத்தாகவே ஆக்கப்பட்டுப் பயணம் அல்லாத போதுள்ள தொழுகை அதிகரிக்கப்பட்டது" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
351. இரண்டு பெருநாள்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்' என்றும் கட்டளையிடப்பட்டோம்.
நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?' எனக் கேட்டதற்கு, 'அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :8
352. 'ஜாபிர்(ரலி) ஒரே வேஷ்டியை அணிந்து கொண்டு அதைத் தங்களின் பிடரியில் முடிச்சுப் போட்டவர்களாகத் தொழுதார்கள். அவர்களின் இதர ஆடைகளோ துணி தொங்க விடப்படும் கம்பில் தொங்கிக் கொண்டிருந்தன. இவர்களிடம் ஒருவர், 'ஒரே வேஷ்டியிலா தொழுகிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'உன்னைப் போன்ற மடையவர்கள் என்னைப் பார்க்க வேண்டுமென்பதற்காகவே இவ்வாறு செய்தேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரண்டு ஆடைகள் இருந்தன?' என்று ஜாபிர்(ரலி) கேட்டார்" என முஹம்மத் இப்னு அல் முன் கதிர் அறிவித்தார்.
Volume :1 Book :8
353. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு 'நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்' என்று கூறினார்கள்" என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.
Volume :1 Book :8

மாதவிடாய்

294. 'நாங்கள் ஹஜ் செய்வதற்காக மதீனாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'உனக்கு என்ன? மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். 'இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் நீ செய்து கொள்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியருக்காக மாட்டைக் 'குர்பானி' கொடுத்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
295. 'நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
296. 'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்' என்றார்" என ஹிஷாம் அறிவித்தார்.
Volume :1 Book :6
297. 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
298. 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்" என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
299. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
300. 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
301. 'நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் 'இஃதிகாப்' இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
302. 'எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?' என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
303. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனைவியரில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள விரும்பினால் கீழாடையைக் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர். 'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்" என்று நபி(ஸல்) கூறினார்கள்" என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
305. 'நாங்கள் ஹஜ் செய்வதற்காக (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். 'ஸரிஃப்' என்ற இடத்தை அடைந்ததும் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நான் இருந்த இடத்திற்கு வந்தார்கள், அழுது கொண்டிருந்த என்னைப் பார்த்து, 'ஏனழுகிறாய்?' என்று கேட்டார்கள். 'இவ்வாண்டு நான் ஹஜ் செய்ய முடியாது என்று கருதுகிறேன்' என்றேன். 'உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!' என்றேன். அப்போது 'இந்த மாதவிடாய் ஆதமுடைய பெண் மக்களின் மீது அல்லாஹ் ஏற்படுத்தியது. எனவே கஅபதுல்லாஹ்வைத் வலம்வருவதைத் தவிர்த்து ஹாஜிகள் செய்கிற மற்ற அனைத்தையும் செய்து கொள்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்
Volume :1 Book :6
306. 'பாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் என்ற பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நான் (இரத்தப் போக்கிலிருந்து) சுத்தமாவதே இல்லை. எனவே நான் தொழுகையைவிட்டு விடலாமா?' என்று கேட்டதற்கு, 'அது ஒரு நரம்பு நோய். அது மாதவிடாயன்று. மாதவிடாய் ஏற்படும்போது தொழுகையைவிட்டு விடு. மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைச் சுத்தம் செய்துவிட்டுத் தொழுது கொள்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
307. 'ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒரு பெண்ணின் துணியில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அவள் எவ்வாறு (சுத்தம்) செய்ய வேண்டும்?' என்று கேட்டதற்கு, 'உங்களில் ஒருத்தியின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டால் அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் தண்ணீர் தெளித்து விடட்டும். அதன் பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளலாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
308. எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது அவர் தன்னுடைய ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்வதற்காகஆடையிலிருந்து இரத்ததைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவியப் பின்னர் ஆடையின் இதர இடங்களிலும் தண்ணீர் தெளித்து அந்த ஆடையுடன் தொழுவார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
309. நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் உதிரப் போக்கினால் இரத்தத்தைக் காண்பவராக இருந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தார்கள். சில வேளை இரத்தத்தின் காரணமாக தமக்குக் கீழே ஒரு தட்டை வைத்துக் கொள்வார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"மஞ்சள் நிற நீரைப் பார்த்ததாகவும் 'இது இன்னவளுக்கு ஏற்படுகிற ஒன்றைப் போன்றே' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என்றும் இக்ரிமா கூறினார்.
Volume :1 Book :6
310. 'நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவர் மஞ்சள் நிற உதிரப் போக்கு இரத்தத்தைக் காணும்போது தமக்கடியில் ஒரு தட்டை வைத்து நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாப் இருந்தவாறு தொழுதார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
311. 'இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாப் இருந்தார்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
312. 'எங்களில் ஒருவருக்கு ஓர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவரின் மாதவிடாய் ஏற்படும். ஏதாவது இரத்தம் அந்த ஆடையில் பட்டால் தங்களின் எச்சிலைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தங்களின் நகத்தால் சுரண்டி விடுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :6
313. 'இறந்தவர்களுக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதற்கு தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்த பின்னர் அவனுடைய மனைவி நான்கு மாதம் பத்து நாள்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்த நாள்களில் நாங்கள் சுருமா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப் பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது மணப் பொருளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வதைவிட்டும் தடுக்கப்பட்டுள்ளோம்" என உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

குளித்தல்

248. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
249. 'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
250. ஃபரக்' என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: 'ஃபரக்' என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
Volume :1 Book :5
251. 'நானும் ஆயிஷா(ரலி) அவர்களின் சகோதரரும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களின் சகோதரர் 'நபி(ஸல்) அவர்களின் குளிப்பு எப்படியிருந்தது?' என்று கேட்டதற்கு, 'ஸாவு' போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தம் தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது' என்று ஆயிஷா(ரலி) கூறினார்" என அபூ ஸலமா அறிவித்தார்.
Volume :1 Book :5
252. 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களுடன் நானும் என்னுடைய தந்தையும் வேறு சிலரும் அமர்ந்திருந்தபோது, அவர்களிடம் குளிப்பைப் பற்றி நாங்கள் கேட்டதற்கு, 'ஒரு ஸாவு' அளவு தண்ணீர் போதும்' என்று கூறினார். அப்போது ஒருவர் 'அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது' என்றதற்கு, 'உன்னை விடச் சிறந்த, உன்னை விட அதிகமான முடி வைத்திருந்த (நபி(ஸல்) அவர்களுக்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது' என்று கூறினார். பின்னர் ஒரே ஆடையை அணிந்தவராக எங்களுக்குத் தொழுகை நடத்தினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Volume :1 Book :5
253. நபி(ஸல்) அவர்களும் (அவர்களின் மனைவி) மைமூனா(ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்பவர்களாக இருந்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மற்றோர் அறிவிப்பில் ஒரு 'ஸாவு' அளவுள்ள பாத்திரம்" என்று கூறப்பட்டுள்ளது.
Volume :1 Book :5
254. 'நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்" என ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
255. 'நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்" என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
256. 'உன் தந்தையின் சகோதரர் மகனான ஹஸன் இப்னு முஹம்மத் இப்னி அல்ஹனஃபிய்யா என்னிடம் கடமையான குளிப்பு எப்படி? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் எடுத்து அதைத் தங்களின் தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள் எனக் கூறினேன். அப்போது 'நான் அதிகமான முடியுடையவனாக இருக்கிறேனே?' என ஹஸன் கூறியதற்கு, நபி(ஸல்) அவர்கள் உம்மை விட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள்' என்று கூறினேன்' என என்னிடம் ஜாபிர்(ரலி) கூறினார்" என அபூ ஜஅஃபர் அறிவித்தார்.
Volume :1 Book :5
257. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன் கைகளையும் இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றித் தங்களின் மர்மஸ்தலங்களைக் குழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். பின்னர் வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கையையும் கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது மாறி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா (ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
258. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது ஹிலாப் பாத்திரம் போன்ற ஒன்றை கொண்டு வரச் செய்து அதிலிருந்து தங்களின் கையில் அள்ளித் தங்களின் தலையின் வலப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் இடப்புறம் ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் இரண்டு கைகளால் தலையைத் தேய்ப்பார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
259. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தங்களின் வலக்கரத்தால் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி இரண்டு கைகளையும் கழுவினார்கள். தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் மண் மூலம் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். பின்னர் தங்களின் முகத்தைக் கழுவினார்கள். மேலும் தம் தலையின் மீது தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர் சிறிது ஒதுங்கி நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். அவர்களிடம் துவாலை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதில் துடைக்கவில்லை" மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
260. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றியபோது (முதலில்) தங்களின் மர்மஸ்தலத்தைத் தங்கள் கையினால் கழுவினார்கள். பின்னர், கையைச் சுவரில் தேய்த்துக் கழுவினார்கள். தொழுகைக்குரிய உளூவைச் செய்தார்கள். குளித்து முடித்துத் தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
261. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்திலிருந்து குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தில் மாறி மாறிச் செல்லும்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
262. 'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது தங்களின் கையைக் கழுவுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
263. 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் கடமையான குளிப்பைக் குளித்தோம்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
264. 'நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியரில் ஒருவரும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்து கடமையான குளிப்புக் குளிப்பார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்.
Volume :1 Book :5
265. 'நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக, நான் தண்ணீர் வைத்தபோது, அவர்கள் தங்களின் இரண்டு முன்கைகளில் தண்ணீர் ஊற்றி இரண்டு அல்லது மூன்று முறை கழுவினார்கள். பின்னர் தங்களின் இடக்கையில் தண்ணீரை ஊற்றி மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைப் பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தினார்கள். தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும் கழுவினார்கள். தலையை மூன்று முறை கழுவினார்கள். தங்களின் உடம்பில் தண்ணீரை ஊற்றினார்கள். பின்னர் தாம் குளித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :5
266. நபி(ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்துத் திரையிட்டேன். நபி(ஸல்) அவர்கள் தண்ணீரைத் தங்களின் கையில் ஊற்றி ஒரு முறையோ, இரண்டு முறையோ கழுவினார்கள். பின்னர் தங்களின் வலக்கரத்தால் இடக்கரத்தில் தண்ணீர் ஊற்றித் தங்களின் மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். தங்களின் கையைச் சுவரில் அல்லது பூமியில் தேய்த்துக் கழுவினார்கள். வாய்க்கும் மூக்கிற்கும் தண்ணீர் செலுத்தினார்கள். மேலும் தங்களின் முகத்தையும் இரண்டு கைகளையும், தலையையும் கழுவினார்கள். தங்களின் உடல் முழுவதும் தண்ணீர் ஊற்றினார்கள். பின்னர், சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவினார்கள். பின்னர் நான் அவர்களிடம் ஒரு துவாலையைக் கொடுத்தேன். அப்போது, 'வேண்டாம்' என்பது போல் தங்களின் கையினால் சைகை செய்தார்கள்" என மைமூனா(ரலி) அறிவித்தார்.
"இரண்டு முறை கை கழுவினார்கள் என்பதோடு மூன்றாவது முறை கழுவினார்கள் என்று மைமூனா(ரலி) கூறினார்களா இல்லையா என எனக்குத் தெரியாது" என்று இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுலைமான் கூறினார்.
Volume :1 Book :5
267. ("நான் நறுமணப் பொருளைப் பயன்படுத்திக் காலையில் இஹ்ராம் அணிந்தவனாக இருக்க விரும்பவில்லை" என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கூறியதை நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறியபோது) 'அல்லாஹ் அப்துர் ரஹ்மானின் தந்தைக்கு ரஹ்மத் செய்வானாக! நான் நபி(ஸல்) அவர்களுக்கு மணப் பொருட்களைப் பூசுவேன். அவர்கள் தங்களின் மனைவியருடன் இரவு தங்கிவிட்டுப் பின்னர் காலையில் இஹ்ராம் அணிந்தவர்களாக இருப்பார்கள். அவர்களிடமிருந்து நறுமணம் கமழும்' என ஆயிஷா(ரலி) கூறினார்" என முஹம்மத் இப்னு முன்தஷிர் அறிவித்தார்.

உளூச் செய்வது

132. 'மதி (அதிக உணர்ச்சியினால் ஏற்படும் கசிவு) வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றி அறிய) மிக்தாத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு ஏவினேன். அவர் அது பற்றி அவர்களிடம் வினவினார். 'அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்" என அலீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
133. ஒருவர் பள்ளிவாசலில் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கிருந்து இஹ்ராம் கட்டவேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' என்று கேட்டபோது 'மதீனா வாசிகள் 'துல்ஹுலைஃபா' என்ற இடத்திலிருந்தும், ஷாம் வாசிகள் 'ஜுஹ்ஃபா' என்ற இடத்திலிருந்தும் நஜ்த் வாசிகள் 'கர்ன்' என்ற இடத்திலிருந்தும் இஹ்ராம் கட்ட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"யமன்' வாசிகள் 'யலம்லம்' என்ற இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரிடமிருந்து இந்த வார்த்தை வந்ததாக எனக்குத் தெரியவில்லை" என்றும் இப்னு உமர்(ரலி) கூறினார்.
Volume :1 Book :4
134. 'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இஹ்ராம் கட்டியவர் அணிய வேண்டிய ஆடைகளைப் பற்றிக் கேட்டதற்கு, 'சட்டை, தலைப்பாகை, கால்சட்டைகள், முக்காடு (அல்லது தொப்பி), பச்சைச் சாயம் தோய்த்த ஆடை, அல்லது சிவப்புக் குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. பாதணிகள் கிடைக்கவில்லையானால் (கணுக்கால்வரை) உயரமான காலுறைகளை அவர் அணிந்து கொள்ளலாம். (ஆனால்) கணுக்காலுக்குக் கீழே உயரம் குறையும் வரை அவ்விரண்டையும் வெட்டிவிடட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
135. 'சிறு தொடக்கு ஏற்பட்டவன் உளூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது" என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபுஹுரைரா(ரலி) கூறியபோது, ஹள்ர மவ்த் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் 'அபூ ஹுரைராவே! சிறு தொடக்கு என்பது என்ன? என்று கேட்டதற்கு அவர்கள் 'சப்தத்துடனோ சப்தமின்றியோ காற்றுப் பிரிவது' என்றார்கள்" ஹம்மாம் இப்னு முனப்பஹ் அறிவித்தார்.
Volume :1 Book :4
136. 'பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூ ஹுரைரா(ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்" நுஅய்கி அல் முஜ்மிர் அறிவித்தார்.
Volume :1 Book :4
137. 'தொழும்போது காற்றுப் பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டதற்கு, 'நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தைக் கேட்கும வரை தொழுகையிலிருந்து திரும்ப வேண்டாம்' என்று அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னு ஆஸிம்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
138. நபி(ஸல்) அவர்கள் குறட்டை விடும் அளவுக்கு உறங்கிய பின்பு (எழுந்து) தொழுதனர். நான் என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் ஓரிரவு தங்கியிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் அந்த இரவின் ஆரம்பத்திலேயே எழுந்தார்கள். (பின்னர் தூங்கினார்கள்) இரவின் சிறு பகுதி ஆனதும் மீண்டும் எழுந்து, தொங்க விடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் துருத்தியிலிருந்து, (தண்ணீர் எடுத்து) சுருக்கமாக உளூச் செய்தார்கள்; பிறகு தொழுவதற்கு நின்றார்கள். நானும் அவர்கள் உளூச் செய்தது போன்று சுருக்கமாக உளூச் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களின் அருகே வந்து அவர்களின் இடப்பக்கத்தில் நின்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி அவர்களின் வலப்பக்கமாக நிற்கச் செய்தார்கள். பின்னர்அவர்கள் அல்லாஹ் நாடிய அளவு தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் ஒருக்களித்துப் படுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பின்னர் கூட்டுத் தொழுகைக்காக அவர்களை அழைத்தார். உடனே எழுந்து அவருடன் (ஸுப்ஹு) தொழுகைக்குச் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால் அவர்கள் (திரும்ப) உளூச் செய்யவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிப்பவர்களில் ஒருவரான அம்ர் என்பவர் 'சுருக்கமாக உளூச் செய்தார்கள்' என்பதோடு 'குறைவாக' என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார். அம்ர் என்பவரிடம் 'சிலர் இறைத்தூதரின் கண்கள்தாம் உறங்கும், அவர்களின் உள்ளம் உறங்காது என்று கூறுகிறார்களே! (அது உண்மையா?)' என நாங்கள் கேட்டதற்கு, 'நபிமார்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி (யான வஹீ)க்கு சமமாகும்' என்று உபைது இப்னு உமைர் கூறத் தாம் கேட்டிருப்பதாகவும், அதற்குச் சான்றாக" உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக என் உறக்கத்தில் கனவு கண்டேன்" (திருக்குர்ஆன் 37:102) என்ற இறை வசனத்தை அவர் ஓதிக் காட்டியதாகவும் சுஃப்யான் அவர்கள் கூறுகிறார்கள்.
Volume :1 Book :4
139. (ஹஜ்ஜில்) நபி(ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ஒரு கணவாயில் வாகனத்தைவிட்டு இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பின்னர் சுருக்கமாக உளூச் செய்தார்கள். அப்போது, 'இறைத்தூதர் அவர்களே! தாங்கள் தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழுகை உமக்கு முன்னர் (முஸ்தலிஃபாவில்) நடைபெறும்' என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறினார்கள். முஸ்தலிஃபா என்ற இடம் வந்ததும்.
இறங்கி மீண்டும் உளூச் செய்தார்கள். இப்போது உளூவை முழுமையாகச் செய்தார்கள். மக்ரிப் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டதும், நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பின்னர் ஒவ்வொருவரும் தத்தம் ஒட்டகங்களைத் தங்குமிடங்களில் படுக்க வைத்தார்கள். பின்னர் இஷாத் தொழுகை நடைபெறப் போகிறது என்று அறிவிக்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை நடத்தினார்கள். (மக்ரிப், இஷா ஆகிய) இரண்டு தொழுகைகளுக்கிடையில் (வேறு எதுவும்) அவர்கள் தொழவில்லை" என உஸமா இப்னு ஜைத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
140. 'இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள். அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். 'இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்" என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
141. 'உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் உடலுறவு கொள்ளச் செல்லும்போது 'அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு உடலுறவு கொள்ளப் போகிறேன். இறைவா! எங்களைவிட்டு ஷைத்தானைத் தூரமாக்கு! (இந்த உறவு மூலம்) நீ எங்களுக்கு அளிக்கப் போகும் (குழந்தைப்) பேற்றிலும் ஷைத்தானை அப்புறப்படுத்து' என்று சொல்லிவிட்டு உறவு கொண்டு அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் எந்த தீங்கும் விளைவிப்பதில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
142. 'கழிப்பிடத்திற்குச் சென்றபோது, 'இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள் ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானைவிட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்' என்று கூறும் வழக்கமுடையவர்களாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
143. 'நபி(ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றதும் நான் அவர்களுக்காகத் தண்ணீர் வைத்தேன். அவர்கள் வெளியே வந்ததும் 'இந்தத் தண்ணீரை யார் வைத்தது?' என்று கேட்டதற்கு (என்னைப் பற்றி) கூறப்பட்டது. உடனே 'இறைவா! இவருக்கு மார்க்கத்தில் நல்ல ஞானத்தைக் கொடுப்பாயாக' என்று பிரார்த்தித்தார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
144. உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: மேற்கூறப்பட்ட ஹதீஸ், கிப்லா தெற்கு வடக்காக அமைந்த மதீனா, யமன், சிரியா போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கே பொருந்தும்.)
Volume :1 Book :4
145. நீர் உம்முடைய தேவைக்காக (மலம் கழிக்க) உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தஸ்ஸையோ முன்னோக்கக் கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒருநாள் எங்கள் வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி(ஸல்) இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இச்செய்தியை அவர்களிடமிருந்து அறிவிக்கும் வாஸிவு இப்னு ஹப்பான் அவர்களை (தொழுது முடித்த பிறகு) நோக்கி இப்னு உமர்(ரலி) 'நீரும் பிட்டங்களை பூமியில் அழுத்தித் தொழுபவர்களைச் சார்ந்தவர்தாம் போலும்" என்று கூறினார்கள். அதற்கு வாஸிவு, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அவர்கள் குறை சொன்னவாறு தொழுதேனா என்பதை அறிய மாட்டேன்" என்று கூறினார்.
"பூமியுடன் (தன் பிட்டங்களை) அப்பியவராகவும், பிட்டங்களைப் பூமியைவிட்டு அகற்றாதவராகவும் ஸஜ்தா செய்து தொழுபவரைத்தான் (இப்னு உமர்) அவர்கள் குறிப்பிட்டார்கள்" என இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இமாம் மாலிக் கூறினார்.
Volume :1 Book :4
146. 'நபி(ஸல்) அவர்களின் மனைவியர் கழிப்பிடம் நாடி வெட்ட வெளிப் பொட்டல்களுக்கு இரவு நேரங்களில் (வீட்டைவிட்டு) வெளியே செல்லும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள். வெட்ட வெளி பொட்டல் என்பது விசாலமான திறந்த வெளியாகும். நபி(ஸல்) அவர்களிடம், 'உங்கள் மனைவியரை (வெளியே செல்லும் போது) முக்காடிட்டு மறைத்துக் கொள்ளச் சொல்லுங்கள்' என உமர்(ரலி) சொல்லிக் கொண்டிருந்தார். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை. நபி(ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா(ரலி) இஷா நேரமான ஓர் இரவில் (கழிப்பிடம் நாடி) வீட்டைவிட்டு வெளியே சென்றார். நபி(ஸல்) அவர்களின் மனைவியரில் அவர்களே உயரமான பெண்மணியாக இருந்தார்கள். அவர்களைப் பார்த்த உமர்(ரலி), 'ஸவ்தாவே! உங்களை யார் என்று புரிந்து கொண்டோம்' என்றார். (அப்போதாவது பெண்கள்) முக்காடிடுவது பற்றிய குர்ஆன் வசனம் அருளப்படாதா என்ற பேராசையில் உரத்து அழைத்தார். அப்போதுதான் பெண்கள் முக்காடு போடுவது பற்றிய வசனத்தை அல்லாஹ் அருளினான்" ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
147. (நபி வீட்டுப்) பெண்களே! நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல (இப்போதும்) உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"வெளியே செல்ல' என்பதற்கு 'கழிப்பிடம் நாடி' என்பதே நபி(ஸல்) அவர்களின் கருத்தாகும்" என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் குறிப்பிடுகிறார்.
Volume :1 Book :4
148. 'ஹப்ஸா(ரலி)வின் வீட்டுக்கூரை மீது ஒரு வேலையாக நான் ஏறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் சிரியாவை முன்னோக்கியும் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் தம் (இயற்கைத்) தேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கக் கண்டேன்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
149. 'எங்கள் வீட்டுக் கூரை மீது ஒரு நாள் ஏவினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் இரண்டு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸ்ஸை முன்னோக்கியவர்களாக அமர்ந்திருக்கக் கண்டேன்" என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
150. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுகூன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீர் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4
151. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் தேவைக்காக வெளியே சென்றால், நானும் சிறுவன் ஒருவனும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் கொண்டு செல்வோம். அந்தத் தண்ணீரின் மூலம் நபி(ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :4

கல்வியின் சிறப்பு

57. 'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
58. (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார்.
பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதி மொழி கொடுத்தேன். இந்தப் பள்ளி வாசலுக்கு உரியவன் மீது ஆணையாக நிச்சயமாக நான் உங்களுக்கு நலம் நாடுபவனாக இருக்கிறேன்' என்றார்.
பின்னர் பாவமன்னிப்புத் தேடியவர்களாக (மேடையைவிட்டு) இறங்கினார்கள்" ஜியாத் இப்னு இலாகா அறிவித்தார்.
Volume :1 Book :3
59. 'ஓர் அவையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தபோதுஅவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். 'மறுமை நாள் எப்போது?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் 'நபி(ஸல்) அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை' என்றனர். வேறு சிலர், 'அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். முடிவாக நபி(ஸல்) அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, 'மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)' இறைத்தூதர் அவர்களே! இதோ நானே' என்றார். அப்போது கூறினார்கள்.' அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்." அதற்கவர், 'அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்?' எனக் கேட்டதற்கு, 'எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
60. 'நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே வந்து கொண்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் உளூச் செய்து கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் கால்களைத் தண்ணீரால் தடவிக் கொண்டிருந்தோம். (அதைக் கண்டதும்) 'குதிங்கால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம் தான்!' என்று இரண்டு அல்லது மூன்று முறை தம் குரலை உயர்த்தி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்
Volume :1 Book :3
61. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று நபி(ஸல்) கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் 'இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள் 'பேரீச்சை மரம்' என்றார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
62. 'மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்?' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டபோது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம்தான் என்று கூற வெட்கப்பட்டு அதைச் சொல்லாமல் இருந்தேன். பின்னர் இறைத்தூதர் அவர்களே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்' எனத் தோழர்கள் கேட்டதற்கு, 'பேரீச்சை மரம்' என்றார்கள்" என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
63. நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தின் மீது அமர்ந்தவராக ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். பள்ளியிலுள்ளே ஒட்டகத்தைப் படுக்க வைத்துப் பின்னர் அதனைக் கட்டினார். பின்பு அங்கு அமர்ந்திருந்தர்களிடம் 'உங்களில் முஹம்மத் அவர்கள் யார்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்களோ மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். 'இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெண்மை மனிதர்தாம் (முஹம்மத்(ஸல்) அவர்கள்)' என்று நாங்கள் கூறினோம். உடனே அம்மனிதர் நபி(ஸல்) அவர்களை 'அப்துல் முத்தலிபின் பேரரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் 'என்ன விஷயம்?' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் 'நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் கேட்கப் போகிறேன். அதற்காக நீங்கள் என் பேரில் வருத்தப்படக் கூடாது' என்றார். அதற்கவர்கள் 'நீர் விரும்பியதைக் கேளும்' என்றார்கள். உடனே அம்மனிதர் 'உம்முடையம் உமக்கு முன்னிருந்தோரதும இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுமைக்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு அவர்கள் 'அல்லாஹ் சாட்சியாக ஆம்!' என்றார்கள். அடுத்து அவர் 'அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும், பகலிலுமாக நாங்கள் ஐந்து நேரத் தொழுகையைத் தொழுது வரவேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர் 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வோர் ஆண்டிலும் குறிப்பிட்ட இந்த மாதத்தில் நாங்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கவர்கள் 'ஆம்! அல்லாஹ் சாட்சியாக' என்றார்கள். அடுத்து அவர், 'இறைவன் மீது ஆணையாக உம்மிடம் கேட்கிறேன்; அல்லாஹ்தான் எங்களில் வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த (ஸகாத் என்னும்) தர்மத்தைப் பெற்று எங்களில் வறியவர்களுக்கு நீர் அதனை வினியோகிக்க வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம் (இறைவன் மீது சாட்சியாக' என்றார்கள். உடனே அம்மனிதர் 'நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன்' என்று கூறிவிட்டு 'நான், என்னுடைய கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன். நான்தான் ளிமாம் இப்னு ஸஃலபா, அதாவது பனூ ஸஃது இப்னு பக்ர் சகோதாரன்' என்றும் கூறினார்" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
64. நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் தம் மடல் ஒன்றைக் கொடுத்து அனுப்பி அதனை பஹ்ரைன் நாட்டு மன்னரிடம் ஒப்படைக்குமாறு கட்டளையிட்டார்கள். அவ்வாறு அம்மனிதர் பஹ்ரைன் மன்னரிடம் ஒப்படைத்தார். அவர் அதை (பாரசீக மன்னன்) கிஸ்ராவிடம் ஒப்படைத்துவிட்டார். அதனைக் கிஸ்ரா படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்து எறிந்தான். '(இச்செய்தியைக் கேள்விப்பட்டதும்) நபி(ஸல்) 'அவர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டும்" என்று அவர்களுக்கு எதிராக (இறைவனிடம்) பிரார்த்தித்தார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இந்த ஹதீஸை அறிவிக்கும் இப்னுஷிஹாப் என்பவர் இப்னுல் முஸய்யப் அவர்கள் இவ்வாறுகூறினார்கள்' என கருதுகிறேன் என்றார்.
Volume :1 Book :3
65. நபி(ஸல்) அவர்கள் ஒரு மடல் எழுதிடும்படிக் கூறினார்கள். அல்லது எழுதிட நாடினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் 'அவர்கள் எந்த மடலையும் முத்திரையிடப்படாமல் படிக்கமாட்டார்கள்' என்றும் சொல்லப்பட்டது. உடனே வெள்ளியில் ஒரு மோதிரம் செய்தார்கள். அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரஸுலுல்லாஹ்" என்பதாகும். நபி(ஸல்) அவர்களின் கையில் அம்மோதிரம் இருக்கும் நிலையில் அதன் (பளிச்சிடும்) வெண்மையை (இப்போதும் நேரில்) நான் பார்த்துக் கொண்டிருப்பது போலிருக்கிறது" என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
(இந்த நபிமொழி அறிவிப்பவர்களில் ஒருவரான ஷுஅபா கூறுகிறார்கள்: எனக்கு இதனை அறிவித்த) கத்தாதா அவர்களிடம், 'அதில் பொறிக்கப்பட்டிருந்த வாக்கியம் 'முஹம்மத்ர் ரசூலுல்லாஹ்' என்றிருந்தது என்று உங்களிடம் யார் கூறியது? எனக் கேட்டேன். அதற்கவர் 'அனஸ்(ரலி) தாம் கூறினார்கள்' என்றார்.
Volume :1 Book :3
66. 'நபி(ஸல்) அவர்கள் மக்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது மூன்றுபேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை முன்னோக்கி வந்தனர். மற்றொருவர் சென்றார். அவ்விருவரும் நபி(ஸல்) அவர்களின் சபையில் வந்து நின்றார்கள். அவ்விருவரில் ஒருவர் வட்டமான அந்தச் சபையில் ஓர் இடைவெளியைக் கண்டபோது அதில் அமர்ந்தார். மற்றவரோ சபையின் பின்னால் அமர்ந்து வெட்கப்பட்டு (கடைசியில் உட்கார்ந்து)விட்டார். எனவே அல்லாஹ்வும் வெட்கப்பட்டான். மூன்றாமவரோ அலட்சியப்படுத்திச் சென்றார். எனவே அல்லாஹ்வும் அவரை அலட்சியப்படுத்தினான்" என அபூ வாக்கித் அல் லைஸீ(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
67. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். ஒருவர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள், 'இது எந்த நாள்?' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். 'இது நஹ்ருடைய (துல்ஹஜ் மாதம் பத்தாம்) நாள் அல்லவா?' என்றார்கள். அதற்கு 'ஆம்' என்றோம். அடுத்து இது 'எந்த மாதம்?' என்றார்கள். அந்த மாதத்துக்கு இன்னும் ஒரு பெயர் சூட்டுவார்களோ என்று கருதி நாங்கள் மெளனமாக இருந்தோம். 'இது துல்ஹஜ் மாதமல்லவா?' என்றார்கள். நாங்கள் 'ஆம்!' என்றோம். அடுத்து '(புனிதமான) இந்த ஊரில், இந்த மாதத்தில், இன்றைய தினம் எவ்வளவு புனிதமானதோ, அதுபோன்று, உங்களின் உயிர்களும், உடைமைகளும் புனிதம் வாய்ந்தவையாகும்' என்று கூறிவிட்டு 'இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்' என்றார்கள்" என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
68. 'எங்களுக்குச் சலிப்பேற்பட்டு விடக் கூடும் என்று அஞ்சிப் பல்வேறு நாள்களிலும் கவனித்து எங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அறிவுரை வழங்குபவர்களாக இருந்தார்கள்" என இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Volume :1 Book :3
69. 'இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
70. 'அப்துல்லாஹ் (இப்னு மஸ்வூத்)(ரலி) ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மக்களுக்கு அறிவுரை கூறும் வழக்கம் உடையவர்களாய் இருந்தார். அப்போது (ஒரு நாள்) ஒருவர் அவர்களிடம் 'அபூ அப்துர் ரஹ்மானே! தாங்கள் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு அறிவுரை பகர்ந்திட வேண்டும் என பெரிதும் விரும்புகிறேன்' என்றார். அதற்கு (உங்களைச் சலிப்படையச் செய்து விடுவேனோ என்று அஞ்சுவதுதான் இதைவிட்டும் என்னைத் தடுக்கிறது. நான் உங்களுக்குச் சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் கவனித்து அறிவுரை கூறுகிறேன். அவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் நாங்கள் சலிப்படைவதை அஞ்சி எங்களுக்கு அறிவுரை கூறிவந்தார்கள்' என்றார்" எனஅபூ வாயில் அறிவித்தார்.
Volume :1 Book :3
71. 'எவருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை மார்க்கத்தில் விளக்கம் பெற்றவராக ஆக்கி விடுகிறான். (போர் ஆதாயங்களை) அல்லாஹ் கொடுப்பவனாக இருக்கிறான். நான் அதை வினியோகிப்பவனாக இருக்கிறேன். இந்தச் சமுதாயத்தில் ஒருசாரார் அல்லாஹ்வின் கட்டளையைப் பேணுவதில் நிலைத்தே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை அவர்களுக்கு மாறு செய்பவர்களால் எந்தத் தீங்கும் செய்து விட முடியாது' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என முஆவியா(ரலி) தம் சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :3
72. நான் இப்னு உமர்(ரலி) உடன் மதீனா வரை சென்றபோது அவர் வாயிலாக 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தபோது ஒரு பேரீச்ச மரக் குருத்து கொண்டு வரப்பட்டது. அதைக் கண்டதும் 'மரங்களில் ஒரு வகை மரமுள்ளது; அது முஸ்லிமுக்கு உவமானமாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அது பேரீச்ச மரம்தான் என்று நான் கூறிட எண்ணினேன். ஆனால் அப்போது நான் அங்கிருந்தவர்களிலெல்லாம் வயதில் மிக்க இளையவனாயிருந்ததால் மெளனமாயிருந்து விட்டேன். அப்போது நபி(ஸல்) 'அது பேரீச்ச மரம்!" என்றார்கள்' என்ற ஒரே ஒரு ஹதீஸைத் தவிர (வேறெதனையும்) அறிவித்தாக நான் கேட்டதில்லை" என முஜாஹித் அறிவித்தார்.
Volume :1 Book :3
73. 'ஒருவருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர் நல்ல வழியில் செலவு செய்தல்; இன்னொருவருக்கு அல்லாஹ் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது ஆகிய இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பேராசை கொள்ளக் கூடாது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
74. '(மூஸா(அலை) அவர்கள் ஓர் அடியாரைத் தேடிச் சென்றதாக அல்லாஹ் கூறும்) அடியார் யார்? என்பதில் இப்னு அப்பாஸும், ஹுர்ரு இப்னு கைஸு அல் பஸாரிய்யு என்பாரும் தர்க்கித்தனர். 'அவர் கிழ்றுதான்' என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். அப்போது அந்த வழியாக உபை இப்னு கஅப்(ரலி) சென்றார். அவரை இப்னு அப்பாஸ்(ரலி) அழைத்து, 'நானும் என்னுடைய இந்தத் தோழரும் மூஸா(அலை) யாரைச் சந்திக்கச் செல்வதற்கு இறைவனிடம் வழிகாட்டும்படி கேட்டார்களோ அந்தத் தோழர் விஷயத்தில் (அவர் யார்? என்று) தர்க்கித்துக் கொண்டோம். நபி(ஸல்) அவர்கள் அது விஷயமாக எதுவும் கூறக் கேட்டிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்! அதற்கு உபை இப்னு கஃபு(ரலி), 'ஆம்!' என்று கூறிவிட்டுத் தொடர்ந்து, 'மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் பிரமுகர்களுக்கிடையில் இருந்த ஒரு சமயத்தில் ஒருவர் வந்தார். '(மூஸா அவர்களே!) உம்மை விடச் சிறந்த அறிஞர் ஒருவரை நீர் அறிவீரா?' எனக் கேட்டதற்கு மூஸா(அலை) அவர்கள் 'இல்லை!' என்றார்கள். அப்போது இறைவன் 'ஏன் இலை? என்னுடைய அடியார் கிழ்று இருக்கிறார்களே!" என்று மூஸா(அலை) அவர்களுக்கு அறிவித்தான். உடனே மூஸா(அலை) அவர்கள் அவரைச் சந்திக்கும் வழி என்னவென்று இறைவனிடம் கேட்டார்கள். அதற்கு இறைவன் மீனை அவர்களுக்கொரு அடையாளமாக ஏற்படுத்தினான். மேலும் அவர்களிடம் 'இந்த மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கிருந்து வந்த வழியே திரும்பி விட வேண்டும்! அப்போது அவரை (அங்கு) நீர் சந்திப்பீர்" என்று சொல்லப்பட்டது. அது போன்று (தம்முடன் கொண்டு வந்த) மீன் கடலில் தொலைந்து போவதை எதிர் பார்த்தவர்களாகத் தம் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அப்போது மூஸா(அலை) அவர்களுடன் வந்த இளைஞர் 'நாம் ஒரு பாறை ஓரமாக ஒதுங்கியபோது அந்த இடத்தில் மீனை மறந்து விட்டேன். (உண்மையில்) நினைவு படுத்துவதைவிட்டும் என்னை மறக்கடித்தவன் ஷைத்தானைத் தவிர வேறு யாருமில்லை' என்று மூஸா(அலை) அவர்களிடம் கூறியபோது 'அட! அது தானே நாம் தேடி வந்த அடையாளம்!' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு இருவருமாகத் தாம் வந்த வழியை நோக்கிப் பேசிக் கொண்டே திரும்பினார்கள். அங்கே கிழ்று (அலை) அவர்களைக் கண்டார்கள். மூஸா, கிழ்று இருவர் விஷயத்தைத்தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்' என்று கூறினார்" என உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்.
Volume :1 Book :3
75. 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அணைத்து 'இறைவா! இவருக்கு வேத ஞானத்தைக் கற்றுக் கொடு' என்று கூறினார்கள்" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
76. 'நான் பெட்டைக் கழுதை ஒன்றின் மீது சென்று கொண்டிருந்தேன். அந்நாளில் நான் பருவ வயதை நெருங்கிக் கொண்டிருந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மினாவில் தடுப்பு எதையும் முன்னோக்காதவர்களாகத் (திறந்த வெளியில்) தொழுது கொண்டிருந்தார்கள். கழுதையை மேயவிட்டுவிட்டு (தொழுவோரின்) வரிசையினிடையே கடந்து சென்று ஒரு வரிசையில் நானும் புகுந்து கொண்டேன். என்னுடைய அச்செயலை யாரும் ஆட்சேபிக்கவில்லை" என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Volume :1 Book :3